சித்தர்களும் சித்த மருத்துவமும்
By Dr. Manekshan.Y.R in Emergency & Trauma
Published On: Jan 23 , 2025 | 2 min read
மானிடராய்ப் பிறந்த யாவருக்கும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்னும் நான்கு அந்தகரணங்களும் ஆன்மாவில் இருக்கும் முக்கிய கருவிகள் ஆகும். மனதையுடையவன் மனிதன், மனிதனின் ஆன்மாவில் உள்ள மனம் ஒன்றை நினைக்கும், புத்தி அதை நல்லதா கெட்டதா என்று விசாரிக்கும். சித்தம் என்பது மனம் நினைத்ததை உறுதியாய் செய்து முடிக்க வல்லது. இறுதியில் கூறப்பட்டுள்ள அகங்காரம் அல்லது அகந்தை என்பது "நான்" என்ற நிலையில் யோசிப்பது மேலும், நான், எனக்கு, என்னால் போன்ற
எண்ணங்கள் மேலிடுவதால் வருவதாகும். சித்தர்கள் என்பவர்கள் தம்முடைய மனம், புத்தி, சித்தம் என்னும் மூன்றையும் ஒன்றிணைத்து, கடவுளையறியும் வழியினை நாடி, இம்மானிடப் பிறவி எடுத்ததன் நோக்கமான அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் நிலைகளை அடைய முயற்சித்து அதில் வெற்றியும் கண்டவர்கள். இவர்கள் நான், எனது என்னும் அகங்காரத்தை அறவே நீத்தவர்கள். அவர்களிடம் அகங்காரம் இல்லாத காரணத்தினாலே தன்னை யாரென்றும், தனக்கென்று எதையும் கூறாமலும் மறைந்தனர். அனைத்து உயிர்களையும் தன்னுயிர் போல எண்ணிச் சீரும் சிறப்புமாய்
உண்மையான அன்பினால் பாதுகாப்பது "அறம்" எனப்படும். இதன் மூலம் சீவாத்மாக்களின் நன்றியையும் நல்லாசியையும் பெறுதலே "பொருள்" எனப்படும். இவ்விரண்டும் நிகழும் போது கடவுள் கருணை கூர்ந்து, மகிழ்ந்து தனது சோதிமயமான தரிசனம் தந்து, அச்சீவனிடம் குடிபுகுந்து அவர்களை ஆதரிப்பதே "இன்பம்" எனப்படும். அறம், பொருள், இன்பம் என்னும் மூன்றையும் பெற்று கடவுளின் அருட்சக்தியால் சீவாத்மாவை(ஆன்மா) இறைவனுடன் இரண்டறக் கலக்கச் செய்வது வீடுபேறு எனப்படும். இத்தகைய நிலையை அடைந்தவர்களே சித்தர்கள். "அன்பையும் விளைவித்து என்னையும் நின்னையும் இன்பையும் நிறைத்து என்னையும் நின்னையும் ஓருருவாக்கி" என்ற பாடலின் படி, தூல உடல் (காரண உடல்) அழிந்து போனாலும், ஆன்மாவை அழியாத உடலாக இறைவன் மாற்றித்தருகிறார். சித்தர்களில் பதினெண் சித்தர்கள், நவநாத சித்தர்கள், நவகோடி சித்தர்கள் என்று வகைப்பாடுகள் இருந்தாலும், பதினெண் சித்தர்களே முதன்மை சித்தர்களாக கருதப்படுவர்.